articles

img

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக்குவோம்! -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 1இல் துவங்கி 10 வரை மாநிலம் முழு வதும் நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான தீக்கதிரை மக்க ளுக்கு எடுத்துச் செல்லும் இந்த மகத்தான பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டு கட்சி உறுப்பினர் அளவில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

அச்சு ஊடகத்தின் முக்கியத்துவம்

அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் அல்லா மல் மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் ஏராளமான சமூக ஊடகங்களும் இயங்கி வரு கின்றன. நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஏற்படும் நிகழ்வுகளையும், உலகளவில் வெடித்துச் சிதறும் முக்கியச் சம்பவங்களையும் நேரலையாக மக்களுக்கு தொலைக்காட்சிகளும், சமூக ஊடகங்க ளும் எடுத்துச் செல்கின்றன. இதனால் அச்சு ஊட கங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை. காரணம் என்ன? சில நிமிடங்களில் உணர்ச்சிப்பூர்வ மாகவும் வர்ணனைகள் மூலமாகவும் செய்திகளை சமூக வலைதளங்கள் எடுத்துச் செல்கின்றன. ஆனால், அந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னால் உள்ள பின்னணியை அச்சு ஊடகங்கள் மட்டுமே விரிவாக விளக்கிட முடியும். அதிலும் குறிப்பாக தீக்கதிர் போன்ற பத்திரிகை மட்டுமே அரசியல் பொருளாதார சமூக நிகழ்வு களை வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

நீட் தேர்வின் பின்னால் ஒளிந்திருக்கும் நோக்கம்

உதாரணமாக, நீட் தேர்வில் கோளாறுகள் நடந்துள்ளன, கேள்வித்தாள் கசிந்துள்ளது, கருணை மதிப்பெண் வழங்கும் மோசடியும் நடந்துள்ளது என சில வரிச் செய்திகளாக காட்சி ஊடகங்கள் வெளி யிட்டன. ஆனால், நீட் தேர்வுக்கு பின்னால் ஒளிந்தி ருக்கும் அதனுடைய நோக்கம் பற்றி தீக்கதிர் நாளேடு விரிவான கட்டுரையை வெளியிட்டது. முக்கி யமாக நீட் தேர்வு பற்றி கட்டுரை எழுதிய மருத்து வர் காசி, நீட் தேர்வின் பின்னால் உள்ள பாஜக அரசின் கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி யுள்ளார். பணம் படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி என்ற கொள்கையை அவர் கீழ்க்கண்டவாறு அம்பலப்படுத்தியுள்ளார்:

“தமிழ்நாட்டில் ஏற்கனவே +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. உயிரியல், இயற்பி யல் மற்றும் வேதியியல் பாடங்களில் 50 சதவிகிதத்திற் கும் குறைவாக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ் -சில் சேர முடியாது. சராசரியாக 200க்கு 180க்கு மேல் மதிப்பெண்கள் இருக்க வேண்டுமென கட் ஆஃப் (நிர்ணயிக்கப்பட்ட) மார்க் உள்ளதால் மேற்கண்ட மூன்று பாடங்களிலும் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தான் மருத்து வக் கல்வியில் சேர முடியும். 

ஆனால், நீட் தேர்வில் 16 - 25 சதவிகிதம் வரை மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக இட ஒதுக்கீடு இடங்களில் லட்ச லட்சமாக பணத்தை செலுத்தி சேர முடியும். 350 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்களுக்கு பணம் இல்லையெனில் மருத்துவச் சேர்க்கை மறுக்கப்படும். இதில் தகுதி மற்றும் திறமை எங்கே இருக்கிறது? எனவே நீட் தேர்வு என்பது கல்வியை குறிப்பாக மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்கி பணம் படைத்தவர்களுக்கே மருத்துவ தொழிற்கல்வி என்ற நிலையை ஒன்றிய அரசாங்கம் உருவாக்கி விட்டது. இதற்காகத்தான் அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது”.

கட்சிப் பத்திரிகையின் அவசியம்...

ஒவ்வொரு சொல்லுக்கும் வார்த்தைக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக் கும் என மா சே துங் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் குறித்து தோழர் லெனின் குறிப்பிட்டதை,  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் போது சுட்டிக் காட்டினார்: 

“நம்முடைய கருத்தோட்டத்தின்படி நம்முடைய செயல்களின் தொடக்கப் புள்ளி நமக்கு தேவையான தொரு ஸ்தாபனத்தை உருவாக்குவதற்கு முன்னோடி யாக நாம் எடுத்து வைக்கும் முதல் அடி; நாம் உரு வாக்கும் ஸ்தாபனத்தை வளர்த்தெடுத்து, ஆழமாக்கி விரிவான முறையில் உறுதியாக முன்னெடுத்துச் செல் வதற்கான பிரதான பணியாக இருப்பது நமக் கான ஒரு அரசியல் பத்திரிகையை துவக்குவது என்பதே ஆகும். நம் அனைவருக்கும் தேவையான ஒரு அரசியல் பத்திரிகை.”

-எங்கிருந்து தொடங்குவது என்ற கட்டுரை யில் லெனினினுடைய வார்த்தைகள் தான் மேற் கண்ட வரிகள். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தோடு இஸ்க்ரா (தீப்பொறி) என்ற இதழை லெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கி யது. கட்சி பத்திரிகை துவக்கியதோடு அதனுடைய தலையங்கக் கொள்கையை பற்றியும் லெனின் வழிகாட்டியுள்ளார். ரஷ்யாவில் மட்டுமல்ல, உலக நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிற போது கட்சிக் கான பத்திரிகையும் உருவாக்கப்படுகிறது.

சந்தா சேர்ப்பு இயக்கம்

தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஜனசக்தி இதழை நடத்தி வந்தது. ஒன்றுபட்ட கட்சிக்குள் தத்துவார்த்த போராட்டத்தை நடத்துவதற்காக 1963 ஆம் ஆண்டு தீக்கதிர் இதழ் உருவாக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு கட்சியின் அதிகாரப்பூர்வ இதழாக தீக்கதிர் வெளியாகி வருகிறது. வார இதழாக துவக்கப்பட்ட தீக்கதிர் நாளேடாக வெளியிடப்பட்டது. மதுரையிலி ருந்து வெளியான தீக்கதிர் நாளேடு தற்பொழுது மதுரை, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி என 5 பதிப்புகளாகவும், எண்மப் பதிப்பாகவும் வெளியாகி வருகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து பகுதி மக்களுக்கும் தீக்கதிரை எடுத்துச் செல்ல  சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.

பாடம் கற்காத பாஜக... 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்திருக்கிறார்கள். தனிப்பெரும் பெரும்பான்மையை இழந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைமை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களி லேயே பாஜக தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்பது மக்களுக்கு தெளிவாகி இருக்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் வீடுகள் புல்டோசர்களால் தரை மட்டமாக்கப்பட்டிருக்கின்றன. புகழ்பெற்ற எழுத்தா ளர் அருந்ததிராய் 14 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய பேச்சுக்காக தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு முடிவு எடுத் துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களின் உண்மைத் தன்மையை கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆல்ட் நியூஸ் சமூக வலைதளத்தை சார்ந்த நிறுவனர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

போர்க்குரல் எழுப்ப...

இந்திய பீனல் கோடு ஐபிசி/பி.ஆர்பி, எவிடன்ஸ்  ஆக்ட் ஆகிய மூன்று புதிய சட்டங்கள் விவாதம் இல்லா மலேயே ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டன. இச்சட்டங்களை அமலுக்கு கொண்டு  வரக்கூடாது, நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டு மென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை நிராகரித்து விட்டு ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து அமலாகும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

எனவே ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி,  ஊடகச் சுதந்திரம், சுயசார்பு பொருளாதாரக் கொள்கை ஆகிய விழுமியங்களை உள்ளடக்கிய அரசியல் சட்டத்தை பாதுகாக்க நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போர்க்குரல் எழுப்ப வேண்டிய நிலைமை மீண்டும் உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் உழைக்கும் வர்க்கத்திற்கு போர் வாளாகவும், கேடயமாகவும் திகழ்ந்திடும் தீக்கதிரை மக்களுக்கு எடுத்துச் செல்வோம். 

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகர மாக்கிடுவோம்.


 

;